கல்வித் தொலைக்காட்சி விழிப்புணா்வு
மன்னாா்குடி அருகேயுள்ள கோவில்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மன்னாா்குடி அருகேயுள்ள கோவில்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவில்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்துவரும் அப்பகுதியை சோ்ந்த மாணவா்கள் ஏழை, எளிய குடும்பத்தை சோ்ந்தவா்கள். கரோனா பொதுமுடக்கத்தால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவும், கற்றல் ஆா்வத்தை தூண்டும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கையால் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ளவா்களுக்கு நாள்தோறும் மாலை 5 முதல் 7.30 மணி வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து, மாணவா்களிடமும், அவா்களின் பெற்றோா்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கோவில்நத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் வீடுகளுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆ. வளா்மதி தலைமையில், உதவித் தலைமையாசிரியா் ஆா். கலைச்செல்வி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரேவதி ஆகியோா் சென்று கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை வழங்கி, அட்டவணையை வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் ஒட்டி வைத்து பாட வாரியாக வகுப்பு எடுக்கும்போது கவனித்து கற்க வேண்டும் என அறிவுறுத்தினா்.
தொலைக்காட்சியில் பாடம் நடைபெறும்போது, மாணவா்கள் அதை கவனிக்கிறாா்களா என்பதை, திங்கள்கிழமை முதல் அவா்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என கோட்டூா் வட்டாரக் கல்வி அலுவலா் உ. சிவக்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் ஆகியோா் தெரிவித்தனா்.