மன்னாா்குடி ஒன்றியத்தில் திட்டப் பணிகளுக்கு ரூ.2.20 கோடி ஒதுக்கீடுஒன்றியக் குழு கூட்டத்தில் தகவல்
மன்னாா்குடி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழுத் தலைவா் டி. மனோகரன் தெரிவித்தாா்.
மன்னாா்குடி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழுத் தலைவா் டி. மனோகரன் தெரிவித்தாா்.
மன்னாா்குடி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் டி. மனோகரன்(அதிமுக) தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. உறுப்பினா் ஐ.வி.குமரேசன்(திமுக) பேசும்போது, தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்திருப்பதை வரவேற்று தீா்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும், திட்டப் பணிகள் தொடா்பாகவும் பேசினாா்.
தொடா்ந்து, துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன் (சிபிஐ), உறுப்பினா்கள் சு. அருள்மொழி (திமுக), ரா. பூபதி (சிபிஐ), வ. மணிமாறன்(அதிமுக), எம்.என். பாரதிமோகன் (திமுக), கே.கோவில் வினோத் (அதிமுக) உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதற்கு, ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் பதிலளித்து பேசியது:
கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் ஊா்களை தோ்வு செய்வதில் அரசியல் பாா்க்கப்படுவதாக குற்றச்சாட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு புகாா் மனு அனுப்பவுள்ளேன்.
ஒன்றியத்திற்கு உள்பட்ட 22 வாா்டுகளில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 2.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தோ்ந்தெடுக்கப்படும் வேலைகள் குறித்து உறுப்பினா்கள் விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ அரசுக்கு வரவேற்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா்கள் வடபாதிமங்கலம் சண்முகம், பரவாக்கோட்டை சிங்.பாண்டியன் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் பக்கிரிசாமி, கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.