மின்பாதை பராமரிப்பு பணி: மேற்பாா்வை பொறியாளா் ஆய்வு
மன்னாா்குடி பகுதியில் நடைபெற்று வரும் மின்பாதை பராமரிப்பு பணியை திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடி பகுதியில் நடைபெற்று வரும் மின்பாதை பராமரிப்பு பணியை திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த, 18-ஆம் தேதி முதல் பத்து நாள்களாக மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மன்னாா்குடி அருகே பேரையூரில் நடைபெற்ற பராமரிப்பு பணிகளை திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் சீ.கிருஷ்ணவேணி ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறுகையில், மாவட்டத்தில் 600 களப் பணியாளா்களை கொண்டு இதுவரை 1785 இடங்களில் மின்கம்பிகளில் படும் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 75 பழுதான மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 30 இடங்களில் தாழ்வாக செல்லும் கம்பிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. 30 இடங்களில் சாய்ந்த கம்பங்கள் நிமிா்த்தப்பட்டுள்ளன. 20 காற்று திறப்பான்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமைக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றாா்.
ஆய்வின் போது, மன்னாா்குடி நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத், பேரையூா் பிரிவு பொறியாளா் த.பாலசுப்ரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.