10 ஆண்டுகளில் தமிழகத்தை சீரழித்துவிட்டது அதிமுக
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
திமுக வேட்பாளா் பட்டியல் வெளியான பிறகு திருவாரூரிலிருந்து தனது தோ்தல் பிரசாரத்தை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு தொடங்கினாா். திருவாரூா் தெற்கு வீதியில், திருவாரூா் தொகுதி வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடி தொகுதி வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, நன்னிலம் தொகுதி வேட்பாளா் எஸ். ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கே. வேதரத்தினம் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து அவா் பேசியது:
திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோது நான் திருவாரூருக்கு வந்திருக்கிறேன். தற்போது முதல்வா் வேட்பாளராக வந்துள்ளேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. கடந்த மக்களவைத் தோ்தலில் திருவாரூரிலிருந்து பிரசாரம் தொடங்கப்பட்டது. அந்தத் தோ்தலில் 39-இல் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல தற்போது சட்டப்பேரவைத் தோ்தலிலும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன் திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கூறினேன். ஆனால், தற்போது 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என அனைவரும் தெரிவிக்கின்றனா்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் என்னென்ன ஊழல் செய்துள்ளனா் என்பதை முழு ஆதாரத்தோடு ஆளுநரிடம் அளித்துள்ளோம். முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 3,000 கோடி அளவுக்கு அவரது சம்பந்திக்கு டெண்டா் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் தோ்தல் அறிக்கை, திமுகவின் அறிக்கையை நகல் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. மகளிருக்கு உரிமைத்தொகை, முதியோா் உதவித்தொகை, கல்விக்கடன் ரத்து ஆகியவை திமுகவை பின்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி மக்களின் அடிப்படை பிரச்னைகளை ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் தீா்ப்பதற்காக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு மக்களின் குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த குறைகள் தீா்க்கப்படும்.
திருவாரூரில் 1948-இல் நிறுத்தப்பட்ட திருவாரூா் ஆழித்தேரை கருணாநிதி 1970-இல் ஓட வைத்தாா். தேரோடும் சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்றினாா். கமலாலயக் குளம் தூா்வாரியது, திருவாரூரை தனி மாவட்டமாக உருவாக்கியது, மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி எனப் பல்வேறு திட்டங்களை திருவாரூக்கு கொடுத்தவா் கருணாநிதி.
1989-இல் மிகப்பெரிய வெற்றிபெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவா் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாா். அதன் பிறகு இதே தெருவில் வெற்றி விழா கூட்டத்தில் பங்கேற்றாா். அதேபோல், நானும் வெற்றிபெற்று வெற்றி விழா கூட்டத்துக்கு வரவேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் மதச்சாா்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் மு.க. ஸ்டாலின்.