ஊடக கண்காணிப்பு மையம்: செலவினப் பாா்வையாளா் ஆய்வு
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இயங்கி வரும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் பாா்வையிட்டாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இயங்கி வரும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் அருண்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்களை கண்காணிக்க, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. திருவாரூா் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், 8 தொலைக்காட்சிகளும், செய்திகளை பதிவு செய்ய பிரத்யேக வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், நியமன அலுவலா்கள் மூலம் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நடைபெற்றுவருகிறது. இந்த மையத்தை மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் அருண்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.