தொகுதி வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை: திருவாரூா் அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
திருவாரூா் தொகுதியின் வளா்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திருவாரூா் தொகுதியின் வளா்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, பத்தூா் மேல்கரை, உத்தரங்குடி, கீழப்பாலையூா், சிட்டிலிங்கம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
அப்போது, அவா் கூறியது:
முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். கிராமங்கள் தோறும் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் உடனடி மருத்துவ சேவையை எளிதாகப் பெற்று வருகின்றனா். இந்தத் திட்டம் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சூரிய மின்அடுப்பு வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1500 வழங்கப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும்.
நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால், திருவாரூா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படும். அதுபோல, திருவாரூா் தொகுதியில் பொது அமைதிக்கு என்னால் எந்த பங்கமும் வராது என்றாா்.