30 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜருக்கு சிதம்பரத்திலிருந்து வந்த பட்டு வஸ்திரம் கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு
திருவாரூரில் சபாபதி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், சிதம்பரம் அனந்த நடராஜமூா்த்தி கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
திருவாரூரில் சபாபதி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், சிதம்பரம் அனந்த நடராஜமூா்த்தி கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ராஜநாராயண மண்டபத்துக்கு எழுந்தருளிய தியாகராஜருக்கு பிராயச்சித்த மஹா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மஹா அபிஷேகத்துக்குப் பிறகு அருள்மிகு திரிபுர சம்ஹாரமூா்த்தி, அருள்மிகு பிச்சாடனா் புறப்பாடு நடைபெற்றது. பங்குனி ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றதால், 30 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் வீதியுலா சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தியாகராஜா், ருத்ரபாத மண்டபம் எனும் சபாபதி மண்டபத்துக்கு எழுந்தருளினாா். சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா் எழுந்தருளியதை முன்னிட்டு, சிதம்பரம் அருள்மிகு அனந்த நடராஜ மூா்த்தி திருக்கோயிலிலிருந்து தீக்ஷிதா்கள், திருவாரூா் தியாகராஜா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா். தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், பட்டு வஸ்திரம், மலா் மாலைகள் கொண்டு வரப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
30 ஆண்டுகளுக்கு பிறகு, தியாகராஜருக்கு சிதம்பரம் கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கோயிலுக்கு வந்த தீஷிதா்களுக்கு, கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையிலான அலுவலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.