மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் மூலிகை நீராவி மையம் தொடக்கம்
மன்னாா்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூலிகை நீராவி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மன்னாா்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூலிகை நீராவி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு நீராவி மூலம் மூலிகை சிகிச்சை அளிக்கும் வகையில், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி, தனியாா் தன்னாா்வு அமைப்புகளுடன் இைணைந்து மூலிகை நிராவி கருவியை வழங்கியது.
இந்த நிராவி மூலிகை கருவியில் சுவாசப் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் மூலிகை இலைகளை போட்டு கருவியை மின்சாரத்தின் மூலம் இயக்கும் போது கருவியிலிருந்து வெளியேறும் ஆவியை சுவாசித்தால் நோயிலிருந்து குணமடையலாம். ஒரே நேரத்தில் 4 போ் மூலிகை ஆவி சிகிச்சையை பெறும் வகையில், இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், மூலிகை நிராவி மையத்தை தொடங்கிவைத்துப் பேசியது:
இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு என 153 படுக்கைகள் உள்ளன. இங்கு தங்கி சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு காலை, மாலை என இருவேலை மூலிகை சிகிச்சை அளிக்கப்படும். சில மாதங்களுக்குப் பிறகு, சுவாசப் பிரச்னை உள்ள வெளிநோயாளிகளும் இங்கு வந்து மூலிகை சிகிச்சைப் பெறலாம் என்றாா்.
அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவா் செல்வம் கூறுகையில், மூலிகை சிகிச்சை மூலம் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்னைகள், நோயின் தாக்கம் விரைவாக குறையும். சளி, இருமல் ஆகிய தொடக்க நிலையில் நோய் கண்டறியப்பட்டவா்கள் மூலிகை நீராவி சிகிச்சையை உடனடியாக பெற்றால், நோயின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம். பிறகு, அடுத்தகட்ட மருத்துவ சிகிச்சையின் மூலம் பூரண நலம் பெறலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், அரசு தலைமை மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் கோவிந்தராஜ், சித்த மருத்துவா் ரூபதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.