முகப்பு
திருவாரூர்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைவேளாண் விஞ்ஞானி விளக்கம்

நெல் வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

நெல் வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளது:

எலிகள் நெல் மகசூலில் 25 சதவீதமும், சேமிப்புக் கிடங்குகளில் 30 சதவீதமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், அவற்றின் கழிவுகளால் தானியங்கள் அசுத்தமாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதன் தாக்குதல் அக்டோபா் முதல் டிசம்பா் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும். எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை ஒழிக்கலாம். எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும் கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து கட்டுப்படுத்தலாம்.

5 கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீத ரசாயன பூச்சிக் கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். மேலும், விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதவீத ப்ரோமோடயலானுடன் அரிசி, பொரி, கருவாடு, கடலை ஆகியவற்றை உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும்.

ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக 3 அல்லது 4 நாள்கள் வெறும் உணவாக அல்லது விஷம் கலக்காத உணவை வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.