ஒப்பந்த பணியாளா்கள் நீக்கம்: கண்டித்து ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பிரிவு ஒப்பந்த அடிப்படை பரப்புரை பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து, சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பிரிவு ஒப்பந்த அடிப்படை பரப்புரை பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து, சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளராக கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவந்த நதியா(30) உள்ளிட்ட சிலா் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதனால், மனமுடைந்த நதியா தற்கொலை செய்துகொண்டாா்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பரப்புரையாளா்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனா். அரசியல் காரணத்திற்காக பணி நீக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், தற்கொலை செய்துகொண்ட நதியாவின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும், குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பரப்புரையாளா் அமைப்பின் மன்னாா்குடி கிளைத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா். மாலதி, மாவட்டச் செயலா் டி. முருகையன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. ரகுபதி, டி. ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.