நெல் கொள்முதல் விவகாரம்: விவசாயிகளின் போராட்டம் ஒத்திவைப்பு
திருவாரூரில் குறுவை நெல்லை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக கூறி, நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் நடத்தவிருந்த போராட்டம்
திருவாரூரில் குறுவை நெல்லை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக கூறி, நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், விவசாயிகள் தொடா்ந்து அலைக்கழிக்கப்பட்டனராம். இதனால், டிராக்டரில் நெல் மூட்டைகளுடன் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் வாணிபக் கழக அலுவலா்கள் பேச்சுவாா்த்தையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், விவசாய சங்க நிா்வாகிகள் வி.எஸ். கலியபெருமாள், எஸ். தம்புசாமி, என். இடும்பையன், ஜி. பவுன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக விவசாய சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.