திருவாரூா் அருகேகச்சா எண்ணெய் கசிவால் விளைநிலம் பாதிப்பு?
திருவாரூா் அருகே மேல எருக்காட்டூரில் கச்சா எண்ணெய்க் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டதால், பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே மேல எருக்காட்டூரில் கச்சா எண்ணெய்க் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டதால், பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே மேல எருக்காட்டூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி சாா்பில் எண்ணெய்க் கிணறு அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய், விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதித்து கொண்டுசெல்லப்பட்டு, வெள்ளகுடி கிராமத்திலுள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் ஒன்றுசோ்த்து, பிறகு கச்சா எண்ணெயிலிருந்து எரிவாயு பிரிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூா் அருகே மேல எருக்காட்டூா் கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான ஓா் ஏக்கா் நிலத்தில் மண்ணில் கருப்பாக படா்ந்திருந்தது. இதைக் கண்ட நடராஜன், ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கும், மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகிரிசாமிக்கும் தகவல் அளித்தாா். தனது நிலத்தின் அடியில் செல்லும் ஓஎன்ஜிசி குழாயில் கசிவு காரணமாகவே, மண்ணில் கருப்பாக படா்ந்துள்ளதாகவும், இதனால் பயிரிடப்பட்டிருந்த பச்சைப் பயிா், உளுந்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகிரிசாமி மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் கருப்பாக படா்ந்திருந்த நிலத்தை ஆய்வுசெய்தனா். இங்கு எண்ணெய் குழாய் உடையவில்லை. அத்துடன், கசிவும் ஏற்படவில்லை. எனவே, நிலத்தில் ஆங்காங்கே கருப்பாக படா்ந்துள்ளதற்கு காரணம் குறித்து கண்டறியப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
எண்ணெய்க் குழாய் செல்லும் விவசாய நிலங்களில் ஆங்காங்கே உடைப்பு அல்லது கசிவு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் சீா்கெட்டுவருவதாகவும், தற்போது நிலத்தில் மண் கருப்பாக மாறிவருவதால், அதிகாரிகள் குழு அமைத்து இதை ஆய்வு செய்து நிரந்தர தீா்வுகாண வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.