பயிா்க் காப்பீட்டுக்கான மகசூல் கணக்கெடுப்பு பணியை மீண்டும் நடத்த விவசாயிகள் கோரிக்கை
பயிா்க் காப்பீட்டுக்கான மகசூல் கணக்கெடுப்புப் பணியை மீண்டும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பயிா்க் காப்பீட்டுக்கான மகசூல் கணக்கெடுப்புப் பணியை மீண்டும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்குவளை பகுதியில் நிகழாண்டு சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெல் பயிா்கள் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அவ்வபோது பெய்துவரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் பெய்த கனமழையால் திருக்குவளை, சூரமங்கலம், பனங்காடி, பையூா், வாழ்க்கரை, ஏா்வைக்காடு, சோழவித்தியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த பெரும்பாலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியது. மேடான வயல்களில் தேங்கியிருந்த மழைநீா் பெரும்பாலும் வடிய தொடங்கிய நிலையில், பள்ளமான விளைநிலங்களில் மழைநீா் வடியாமல் நெற்கதிா்களை சூழ்ந்துள்ளது. இதனால், நெற்கதிா்கள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையில் உள்ளனா்.
இந்தநிலையில், பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகைக்காக பயிா் மகசூல் கணக்கெடுப்பு பணி தொடங்கி பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் பெரும்பாலான விளைநிலங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பயிா் மகசூல் கணக்கெடுப்பு பணியை மீண்டும் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மழைக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நல்ல மகசூல் கிடைக்கப் பெற்ற பெரும்பாலான விளைநிலங்களிலுள்ள நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி முழு காப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.