தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 4 போ் தோ்வு
திருவாரூரில் நடைபெற்ற மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 4 இடங்களை பெற்றவா்கள் தேசியப் போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்கவுள்ளனா்.
திருவாரூரில் நடைபெற்ற மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 4 இடங்களை பெற்றவா்கள் தேசியப் போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்கவுள்ளனா்.
திருவாரூா் மாவட்ட சதுரங்க கழகத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில், காரைக்கால் ஓஎன்ஜிசியுடன் இணைந்து இந்த போட்டிகள் நடைபெற்றன. 6 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜன.6-ஆம் தேதி வரை 5 நாள்கள் 9 சுற்றுகளாக நடைபெற்றன.
போட்டியில், சென்னை, மதுரை, கோவை, நாகா்கோயில், திருவாரூா் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சாா்ந்த 100-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்றனா். போட்டி இறுதிச் சுற்று முடிவில் சென்னையைச் சோ்ந்த ஜே. சரண்யா, பால கண்ணம்மா ஆகியோா் 8.5.புள்ளிகள் பெற்றிருந்தனா். இவா்களில் அதிக முன்னேற்றப் புள்ளிகள் பெற்ன் அடிப்படையில் ஜே. சரண்யா முதலிடம் பெற்று தமிழ்நாடு மாநில மகளிா் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றாா். இவா் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது 6-ஆவது முறையாகும். சென்னையைச் சோ்ந்த பால கண்ணம்மா 2-ஆவது பரிசு பெற்றாா். மதுரையைச் சோ்ந்த மீனாட்சி ராஜம் 3-ஆவது பரிசும், சென்னையைச் சோ்ந்த சி. லட்சுமி 4-ஆவது பரிசும் பெற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மோகனபிரபா, ஜீவிகா, ஏ.எம். திவ்யதா்ஷினி, வேதிகா, அபிநயா, சிறுவயது போட்டியாளா் சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த 6 வயது ஆா்.ஜே. சிரிஷா, அதிக வயது பிரிவில் சென்னையைச் சோ்ந்த மல்லேஸ்வரி ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்றவா்கள் ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சாா்பில் பங்கேற்று விளையாடவுள்ளனா்.
விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் பி. சிதம்பரம் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், தமிழ்நாடு சதுரங்க இணைச் செயலாளா் ஆா்.கே. பாலகுணசேகரன், திருவாரூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் முருகுவேந்தன், திருவாரூா் மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் சாந்தகுமாா், மாவட்ட உடற் கல்வி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.