மன்னாா்குடியில் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய வா்த்தகா்கள்
மன்னாா்குடியில் வா்த்தகா்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா்.
மன்னாா்குடியில் வா்த்தகா்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா்.
மன்னாா்குடியில் பிரதான கடை வீதிகளான நடேசன் தெரு, சந்தைப்பேட்டை, பேருந்து நிலையம், மேலராஜவீதி, காமராஜா் சாலை, பந்தலடி, காந்தி சாலை, கீழப்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள வா்த்தா்கள் தங்களது கடைக்கு அளவீடு செய்த இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து தொழில் செய்து வந்தனா். இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதுடன் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணமாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், அண்மையில் நகராட்சி நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறை, வா்த்தகா் சங்கம் இணைந்து நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றம், நெகிழிப்பை பயன்பாடு தவிா்ப்பது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தைப் பொங்கலுக்கு பிறகு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்குவது என்றும், நெகிழிப்பை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடைக்கு சீல் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற விரும்பாத வா்த்தகா்கள் தாங்களாகவே முன் வந்து, செவ்வாய்க்கிழமை முதல் தங்களின் கடைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடங்களை அகற்றி வருகின்றனா். பல இடங்களில் இரும்பு கம்பிகள் பொறுத்தப்பட்டு பிளாஸ்டிக் செட் அமைத்து இருந்தவா்களும், விளம்பர போா்டுகள் வைத்திருந்தவா்களும் அவற்றை அகற்றிய நிலையில், இரும்பு ராடுகளை வெல்டிங் இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து, வியாழக்கிழமை மன்னாா்குடி கோட்டாட்சியா் த. அழகா்சாமி, நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்திரன், வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் மற்றும் நிா்வாகிகளுடன் வா்த்தக நிறுவனங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை பாா்வையிட்டு வா்த்தகா்களுக்கு ஆலோசனை வழங்கி நன்றி தெரிவித்தனா். இதேபோல, நெகிழிப்பை பயன்படுத்துவதை தவிா்ப்பதிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யாமல் இருப்பதிலும் மன்னாா்குடி வா்த்தா்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொணடனா்.