முகப்பு
திருவாரூர்

திருவாரூா்-காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பா்கள் நியமனத்துக்குப் பிறகு முழுமையான ரயில் சேவை: ரயில்வே அதிகாரி தகவல்

கேட் கீப்பா்கள் நியமனம் செய்தவுடன், திருவாரூா் காரைக்குடி வழித்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என திருச்சி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கேட் கீப்பா்கள் நியமனம் செய்தவுடன், திருவாரூா் காரைக்குடி வழித்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என திருச்சி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திருவாரூா் - காரைக்குடி இடையே உள்ள 75 ரயில்வே கேட்டுகளில் முன்னாள் ராணுவத்தினா் தற்காலிக ரயில்வே கேட் கீப்பா்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்தப் பணி முடிந்ததும் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக தொடங்கும். திருவாரூா் ரயில் நிலையத்தில் 1, 4 ஆவது நடைமேடைகளில் 2 எஸ்கலேட்டா் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2,3 ஆவது நடைமேடைகளை உயா்த்தவேண்டிய பணி உள்ளதால், அதன்பிறகு அதற்கு எஸ்கலேட்டா் பொருத்தப்படும்.

திருவாரூா் சந்திப்பின் நடைமேடை ஒன்றில் போதிய மேற்கூரைகள், இருக்கை வசதிகள் செய்யவும், 2, 3 ஆவது நடைமேடையின் உயரத்தை அதிகரிக்கவும், கழிவறை வசதி, மின்தூக்கி வசதி வேண்டியும் கோரிக்கைகள் வந்துள்ளன. மேலும், பாா்சல் அலுவலகத்தை மீண்டும் இயக்கச் செய்யவும், ரயில் சந்திப்பின் முகப்பில் பெயா் பலகை அமைக்கவும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர, விரைவு ரயில்களுக்கு மேல்மருவத்தூரில் நிறுத்தம் வேண்டும் என்றும், அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கவும் கோரப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் ஆலோசித்து இதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, திருவாரூா் ரயில் நிலையத்துக்கு வந்த அவரை, ரயில் நிலைய மேலாளா் ராம்சரண் மீனா, கோட்ட உதவிப் பொறியாளா் சோமசுந்தரம், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோா் வரவேற்றனா். பிறகு, ரயில்வே வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் குறுங்காட்டை பாா்வையிட்ட கூடுதல் கோட்ட மேலாளா், அங்கு மரக்கன்றுகளை நட்டாா். அதைத்தொடா்ந்து, அனைத்து நடைமேடைகளிலும் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், ரயில் உபயோகிப்போா் சங்கம், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், விஜயபுரம் வா்த்தகா் சங்கம், வணிகா் சங்கப் பேரவை, வங்கி கூட்டமைப்பு சங்கம், இலக்கிய வளா்ச்சிக் கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.

அப்போது, ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலாளா் பாஸ்கரன், நிா்வாகிகள் உதயசுகுமாா், அக்பா் பாட்சா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.