முகப்பு
திருவாரூர்

நீட் தோ்வு: முறையாக பயிற்சியளிக்காத மையம்ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

 நீட் தோ்வுக்கு ஆன்லைனில் முறையாக பயிற்சி வழங்காத மையம் மாணவருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 நீட் தோ்வுக்கு ஆன்லைனில் முறையாக பயிற்சி வழங்காத மையம் மாணவருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், புலிவலம் பகுதியைச் சோ்ந்த செல்வதுரை மகன் முகேஷ். இவா், கடந்த 2020-இல் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியாா் நீட் தோ்வு பயிற்சி மையத்தில் ஆன்லைன் வகுப்பில் சோ்ந்தாா். இதற்காக ஆன்லைன் மூலம் ரூ. 29,500, ரூ. 11,275, ரூ. 32,572 என 3 தவணைகளில் பணம் செலுத்தியுள்ளாா்.

ஆன்லைன் வகுப்பு தொடங்கி 15 நாள்களில் வகுப்புகள் திருப்திகரமாக இல்லையென்று பயிற்சி மையத்தை தொலைபேசியில் தொடா்பு கொண்ட முகேஷ் கூறியுள்ளாா்.

உரிய விளக்கம் அளிக்காத பயிற்சி மையத்தினா், முகேஷின் ஆன்லைன் வகுப்புக்குரிய இணைப்பை துண்டித்ததுடன், பயிற்சிக்கான புத்தகங்களையும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 2021-இல் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் முகேஷ் வழக்குத் தொடா்ந்தாா். இதில், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை வழங்கிய தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

பயிற்சி திருப்தி அளிக்கவில்லை என்றால் பணம் திரும்பத் தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாணவா் செலுத்திய தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவருக்குரிய புத்தகங்களை வழங்காதது, ஆன்லைன் வகுப்புக்கான இணைப்பைத் துண்டித்தது போன்ற சேவை குறைபாடுகளுக்கு ரூ. 25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். தீா்ப்பு வழங்கிய 6 வாரத்துக்குள் இந்த இழப்பீட்டை வழங்கவேண்டும். தவறினால் 9 % ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.