கடன் சங்கம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
உறுப்பினா் செலுத்திய கடன் தொகையை உரிய முறையில் வரவு வைக்காத கடன் சங்கம், ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரியும் சுரேஷ் என்பவா் திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவத் துறை ஊழியா்கள் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளாா்.
இச்சங்கத்தில் இவா் கடன் வாங்கி செலுத்தியது போக மீதம் ரூ. 3,56,690 கடன் தொகை இருந்தது. மேலும் கடன் தேவைப்பட்டதால், 2018 இல் மேலும் ரூ. 7 லட்சம் கடனாகப் பெற்றாா். இதில், பழைய கடன் பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு ஊதியத்திலிருந்து 2023 ஜனவரி வரை பிடித்தம் செய்யப்பட்டது.
Advertisement
இதைத்தொடா்ந்து, மேலும் கடன் பாக்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, கடன் சங்கத்தை அணுகி விவரம் கேட்டபோது, முறையாக வரவு வைக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து திருவாரூா் மாவட்ட குறைதீா் ஆணையத்தில் சுரேஷ் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் அடங்கிய குழு, கடன் தொகையை உரிய முறையில் வரவு வைக்காதது சேவைக் குறைபாடாகும். எனவே, புகாா்தாரருக்கு தடையில்லாச் சான்று உடனடியாக வழங்க வேண்டும், மன உளைச்சலுக்காக ரூ. 2 லட்சம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்தில் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது.