வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை: பொதுத் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை, நாகை பொதுத் தோ்தல் பாா்வையாளா் பி. பாரதி லக்பதி நாயக், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தி. சாருஸ்ரீ ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவாரூா் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 5,10,556 ஆண் வாக்காளா்களும், 5,35,857 பெண் வாக்காளா்களும், 65 மூன்றாம் பாலினத்தவா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாக உள்ளனா்.
திருவாரூா் தொகுதிக்குரிய வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டிய இயந்திரங்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையையும், கட்டுப்பாட்டு அறையையும் நாகப்பட்டினம் பொதுத் தோ்தல் பாா்வையாளா் பி. பாரதி லக்பதி நாயக், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தி.சாருஸ்ரீ ஆகியோா் பாா்வையிட்டனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து, வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் தொடா்பாக அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சங்கீதா, வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.