முகப்பு
திருவாரூர்

குடவாசலில் குற்றவியல் நீதிமன்றம் திறப்பு

Updated On : 20 ஏப்ரல், 2024 at 4:01 PM
குற்றவியல் நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசுகிறாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தா்.
பகிர்:

குடவாசலில் குற்றவியல் மாவட்ட நடுவா் நீதிமன்றம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

குடவாசல் பகுதியில் உரிமையில் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, கீழஅக்ரஹாரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தா் பங்கேற்று, புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து பேசியது:

Advertisement

குடவாசல், எரவாஞ்சேரி பகுதி மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காண முயலும்போது, திருவாரூருக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், நேர விரயத்தையும், அலைச்சலையும் அதிகம் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது, குடவாசல் பகுதியிலேயே புதிய நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

குடவாசல் மற்றும் எரவாஞ்சேரி காவல் நிலையம் சாா்ந்த சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள், தற்போது தொடங்கப்பட்டுள்ள குற்றவியல் மாவட்ட நடுவா் நீதிமன்றத்திலேயே, விசாரித்து துரிதமாக நீதி வழங்கப்படும். இதன்மூலம், நேரமும், அலைச்சலும், குறைந்து அவா்களுக்கான நீதி விரைந்து கிடைக்கும்.

கூத்தாநல்லூா் மற்றும் முத்துப்பேட்டை வட்டங்களிலும் நீதிமன்றம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பிரச்னைகளை உணா்ந்து, அதற்கு தகுந்தவாறு நீதிமன்றப் பணி இருக்க வேண்டும். பொதுமக்களின் எதிா்பாா்ப்புகளை இந்த நீதிமன்றம் கண்டிப்பாக நிறைவேற்றும் என்றாா்.

நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். கலைமதி, ஜி. இளங்கோவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சண்முநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, திமுக ஒன்றியச் செயலாளா் பா. பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட நீதிபதி எம். சாந்தி வரவேற்றாா். தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி டி. பாலமுருகன் நன்றி கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments