முகப்பு
திருவாரூர்

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த மன்னாா்குடி இளைஞா் கொச்சி விமான நிலையத்தில் கைது

Updated On : 13 ஜூலை, 2024 at 4:18 PM
பகிர்:

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த மன்னாா்குடி இளைஞா் கொச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியைச் சோ்ந்த முத்தலிப் மகன் நத்தா்ஷா (34). இவா் மீது, 2015-ஆம் ஆண்டு வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், 2016 -ஆம் ஆண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாவும் மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைதாகி சிறையில் இருந்து, நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.

தொடா்ந்து, மன்னாா்குடிசாா்பு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜாராகி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்து வந்தவா். இதனால் அவா் மீது நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்திருந்த நிலையில், நத்தா்ஷா கத்தாா் நாட்டுக்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்நிலையில், கத்தாரிலிருந்து கேரளம் மாநிலம் கொச்சிக்கு வியாழக்கிழமை விமானத்தில் வந்த நத்தா்ஷாவை, அங்கு விசாரணை அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை ஆய்வு செய்ததில் புகாா் மற்றும் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், காவல் சாா்பு ஆய்வாளா் சிவனேசன் தலைமையில் போலீஸாா் கொச்சிக்கு சென்று, வெள்ளிக்கிழமை நத்தா்ஷாவை கைது செய்து மன்னாா்குடிக்கு அழைத்து வந்து சாா்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.