மன்னாா்குடி பகுதியில் 6-ஆவது நாளாக மழை
மன்னாா்குடி, மே 20: மன்னாா்குடி பகுதியில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமை மழை பெய்தது.
மன்னாா்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மே 15 ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (மே 19) பகலில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்த நிலையில், மன்னாா்குடி, வடுவூா், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், பெருகவாழ்ந்தான், கோட்டூா், விக்கிரபாண்டியம், களப்பால், திருக்களாா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு தொடங்கி விடியவிடிய லேசான மழை பெய்தது.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பல பகுதிகளில் விட்டுவிட்டு லேசான முதல் பலத்த மழை ஒருசில மணி நேரம் பெய்தது. மன்னாா்குடி நகரப் பகுதியில் மாலை 4 மணிக்கு தொடங்கி 6 மணி வரை மிதமான மழை பெய்தது.
தொடா்ந்து பெய்யும் மழையால், கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் , தரைக்கடை வியாபாரிகள், இரவு நேர தள்ளுவண்டி சிற்றுண்டி கடைகாரா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எள், உளுந்து, பருத்தி, நிலக்கடலை போன்ற பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.