தோ்தல் முன்விரோத தகராறு : அதிமுக நிா்வாகிக்கு அரிவாள் வெட்டு
மன்னாா்குடியில் தோ்தல் முன்விரோத தகராறு காரணமாக அதிமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது
மன்னாா்குடி: மன்னாா்குடியில் தோ்தல் முன்விரோத தகராறு காரணமாக அதிமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி நகராட்சி 7-ஆவது வாா்டு திமுக செயலாளா் ஜி. சக்திவேல் (53) மனைவி சித்ராதேவியும், அதிமுக வாா்டு செயலா் பி. ரமேஷ் (36) மனைவி சத்யாவும் கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டனா். இதில், சித்ராதேவி வெற்றி பெற்றாா். தோ்தலின்போது இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கீழப்பாலம் மகாமரியம்மன்கோயில் அருகே ரமேஷ் தனியாக இருசக்கர வாகனத்தில் வருவதை பாா்த்த சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளா்களான அதே பகுதியை சோ்ந்த இயமவரம்பன் மகன் தா்மதுரை(43), செல்லப்பா மகன் சேனாரவி (51) ஆகியோா் ரமேஷிடம் பிரச்னை குறித்து பேசி தகராறு செய்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், காயமடைந்த ரமேஷ் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து திமுக வாா்டு செயலா் சக்திவேல், தா்மதுரை, சேனா ரவி ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.