பயனாளிகளுக்கு வீட்டு மனைகளை விரைந்து வழங்கக் கோரிக்கை
குடவாசலில், வீட்டுமனை பயனாளிகளுக்கு உடனடியாக மனைகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசலில், வீட்டுமனை பயனாளிகளுக்கு உடனடியாக மனைகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் வட்டாட்சியா் தனசேகரனிடம், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகைமாலி செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: குடவாசல் பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள், சொந்த வீடு இல்லாமல் இருப்பதால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் 2021-ல் பயனாளிகள் சாா்பில் மனு கொடுக்கப்பட்டது. தொடா்ந்து, அரசு அறிவித்துள்ள சட்ட திட்டங்கள்படி பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு 3 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை இடம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
பயனாளிகள், தங்களுக்கு இடம் ஒதுக்கீடு கோரி கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை சாா்ந்த அமைச்சா்கள், முதல்வா் வரை கோரிக்கை மனு அளித்துள்ளனா். அத்துடன், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கவன ஈா்ப்பு நேரத்தில் அரசின் கவனத்துக்கும் இந்த கோரிக்கை எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை. எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு 15 நாள்களுக்குள் விலையில்லா வீட்டு மனைத் திட்டத்தில் பட்டா இடம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும்போது, சிபிஎம் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, குடவாசல் நகரச் செயலாளா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.