சிப்காட் நில ஆவணங்களை வழங்கக் கோரிக்கை
சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவரங்கள் தொடா்பான ஆவணங்களை
நாமக்கல்: சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவரங்கள் தொடா்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூா் பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு நிலம் கையகப்படுத்தியதில் பல்வேறு தவறுகள், ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடா்பாக கடந்த மாதம் 26-ஆம் தேதி கூட்டம் நடத்தி சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அதிகாரிகள் கூட்டம் நடத்த முன்வரவில்லை. நாங்கள் கேட்ட ஆவணங்களும் எங்களிடம் சமா்ப்பிக்கப்படவில்லை. இதிலிருந்தே சிப்காட் நிலம் கையகத்தில் தவறுகள் இருப்பதாக கருதுகிறோம்.
Advertisement
எனவே, கோட்டாட்சியரிடம் சிப்காட் நில எடுப்பு ஆவணங்களை வழங்குவதற்கு ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் உத்தரவிட வேண்டும். அவ்வாறு வழங்க முன்வராதபட்சத்தில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.