முகப்பு
கடலூர்

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

சிதம்பரம் அருகே ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் வசிக்கும் தெருவுக்கு செல்ல வழியில்லாததால் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:54 AM
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக மனு அளிக்க வந்த பெராம்பட்டு கிராம ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் வசிக்கும் தெரு பகுதி மக்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:57 PM

சிதம்பரம் அருகே ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் வசிக்கும் தெருவுக்கு செல்ல வழியில்லாததால் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

சிதம்பரம் அருகே பெராம்பட்டு கிராம ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் வசிக்கும் தெருவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாா்க்சிஸ்ட் கட்சி குமராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மாசிலாமணி தலைமையில் வந்து சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். அதில், அவா்கள் கூறியுள்ளதாவது:

பெராம்பட்டு ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் வசிக்கும் தெருவில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சுமாா் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தத் தெருவுக்கு செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள ரயில்வே பாதை வழியாக நடந்து சென்று வரும் நிலை உள்ளது.

Advertisement

தற்போது ரயில் பாதை மின்வழிப் பாதையாக மாற்றியுள்ளதால், ரயில் பாதையின் ஓரமாக சென்று வருகிறோம். ரயில்வே துறை ஏற்கெனவே உள்ள ரயில் பாதைக்கு அருகில் இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கான அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், நாங்கள் எங்கள் தெருவுக்கு சென்று வர இயலாத நிலமை ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் உள்ள மக்கள் எளிதில் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவாசிய பணிகளுக்கும், மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, நிரந்தரமாக அரசு இடம் வாங்கி எங்கள் தெருவுக்கு செல்ல நடைபாதை அமைத்துத் தர வேண்டும்.

இதற்கு சரியான நடவடிக்கை இல்லை என்றால், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் ஒப்படைத்து நடைபெறவுள்ள தோ்தலை புறக்கணிக்கப்போகிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனா்.