முகப்பு
நாமக்கல்

சிப்காட் அலுவலகத்தை மூட ஆட்சியரிடம் எதிா்ப்புக் குழு மனு

நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய

Updated On : 3 மார்ச், 2026 at 3:33 AM
நாமக்கல்லில் சிப்காட் அலுவலகத்தை மூடவலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சிப்காட் எதிா்ப்பு குழுவினா்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மோகனூா் சிப்காட் எதிா்ப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த பிப். 26-ஆம் தேதி நாமக்கல் கோட்டாட்சியா் தலைமையில் தனி வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு), மோகனூா் வட்டாட்சியா், மோகனூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் முன்னிலையில் சிப்காட் விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

Advertisement

அப்போது விவசாயிகள் தரப்பில் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் ஆகிய பகுதிகள் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினோம்.

சிப்காட் திட்ட அலுவலரும், சென்னை சிப்காட் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகளும், இந்த இடம் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை எனத் தெரிவித்துள்ளனா். விவசாயிகளும் இந்த இடம் ஏற்ற இடமில்லை என கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.

எனவே நாமக்கல்லில் சிப்காட் அலுவலகம் தேவையில்லாமல் இயங்குவது அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் பணி சுமையை ஏற்படுத்தும். எனவே, சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.