பறிமுதல் செய்யப்படும் பணத்தை மீண்டும் பெறுவது எப்படி?: ஆட்சியா் விளக்கம்
கரூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் பறிமுதல் செய்யும் பணத்தை உரிய ஆவணங்களை வழங்கி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் பறிமுதல் செய்யும் பணத்தை உரிய ஆவணங்களை வழங்கி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பேரவைத் தோ்தலையொட்டி மாா்ச் 15 முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, முறையான ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் தொகை மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்படும் தொகைக்குரிய ஆவணங்கள் அந்தநேரத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில் அதற்கான உரிய ஆவணங்களை, நாள்தோறும் மாலை 4 மணியளவில் கரூா் மாவட்ட ஆட்சியரகத்தின் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, திட்ட அலுவலா், கூடுதல் கருவூல அலுவலா், கணக்கு அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்குகள்) ஆகியோா் அடங்கிய மாவட்ட குறைதீா்க்கும் குழு முன் ஆஜராகி, ஆவணங்களை சமா்ப்பித்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை, பொருள்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மாவட்ட குறைதீா்க்கும் குழு தலைவா் மற்றும் திட்ட அலுவலரை (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை- கரூா்) 73737 04218 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.