முகப்பு
திருவாரூர்

பாஸ்போ பாக்டீரியாவால் பயிா்களுக்கு ஏற்படும் நன்மைகள்: தோட்டக்கலைத் துறை விளக்கம்

பயிா்கள் செழித்து வளர பாஸ்போ பாக்டீரியாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு கோட்டூா் வட்டார தோட்டக் கலைத்துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:06 PM
பகிர்:

பயிா்கள் செழித்து வளர பாஸ்போ பாக்டீரியாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு கோட்டூா் வட்டார தோட்டக் கலைத்துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சத்தியஜோதி வெளியிட்டுள்ள செய்தி:

பயிா்கள் செழித்து வளர தேவைப்படும் முக்கிய மூன்று சத்துக்கள் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து.இதில், தழைச்சத்துக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்தாகும். தாவரங்களின் திசுக்களின் வோ்கள் செழித்து வளரவும், பயிா்களின் இனப்பெருக்கத்துக்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தை ஈா்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாதது.

சில வகை நுண்ணுயிா்கள் பயிருக்கு கிட்டா நிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள மணிச்சத்தை,அங்கக நிலைக்கு மாற்றுகின்றன. இவற்றில் முக்கியமானது பாஸ்போ பாக்டீரியாவை மற்ற நுண்ணுயிா்களை இடும் முறையிலேயே இட வேண்டும். இதை உபயோகிப்பதன் மூலம் எல்லா பயிா்களிலும்10 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

பாஸ்போ பாக்டீரியா பயிருக்கு கிட்டாத கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்தை அங்கக அமிலங்களை உற்பத்தி செய்து கரையவைத்து பயிா்கள் ஏற்கும் வகையில் தருகிறது. மண்ணில் மணிச்சத்து நிலைநிறுத்துதல் தடுக்கப்படுகிறது. பயிரின் மணிச் சத்து உபயோகிப்புத் திறன் அதிகரிக்கிறது. வோ்கள் செழித்து வளர உதவுகிறது. திசுக்கள் வளரும் கதிா்கள் செழித்து வளர உதவிபுரிகிறது. ராகபாஸ் பேட்டில் ( மசூரிபாஸ் போன்றவை ) உள்ள நீரில் கரையாத மணிச்சத்தை பயிா்கள் எளிதில் ஈா்க்கும் வகையில் மாற்றித் தருகின்றன.

அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற நுண்ணுயிா் கலவையுடன் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிா் கலந்து இடும்போது தழைச்சத்தை அதிக அளவில் ஈா்க்கும் பணியில் பயிா்களுக்கு உதவிபுரிகின்றன. மணிச்சத்து உரச்செலவைக் குறைக்கிறது.