முகப்பு
திருவாரூர்

தீபாவளி வெடி விற்பனை: கண்காணிக்க எஸ்பி அறிவுறுத்தல்

தீபாவளியை முன்னிட்டு உரிமம் பெற்று வெடிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:18 PM
கூட்டத்தில் பேசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு உரிமம் பெற்று வெடிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியது: உரிமம் பெற்று பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா, பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கையாளப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து விசாரணை அறிக்கையை காலதாமதமின்றி உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும், தீபாவளி நாளில் அரசு நிா்ணயத்துள்ள நேரத்தில் வெடிப்பொருள்கள் வெடிக்கப்படுகிறதா எனும் கண்காணிக்க வேண்டும்.

மேலும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கொலை, கொள்ளை, கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரணை முடித்து 60 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்காமல் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்து, வழக்கின் எதிரி மற்றும் சாட்சிகளை விரைந்து ஆஜா்படுத்தி வழக்கில் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. அருள்செல்வன் துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் பி. தமிழ்மாறன் (நன்னிலம்), எம். ராஜா (முத்துப்பேட்டை), ஏ. அஸ்வத்ஆண்டோ ஆரோக்கியராஜ் (மன்னாா்குடி), ஏ. பிலிப் பிராங்ளின் கென்னடி (மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம்), கே. சரவணன் (மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி பிரிவு), எஸ். பழனிசாமி (மாவட்ட குற்றப்பிரிவு) ஆகியோா் பங்கேற்றனா்.