முகப்பு
மதுரை

மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

Updated On : 15 மார்ச், 2026 at 1:56 AM
கோப்புப் படம்
பகிர்:

நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை இடித்து அகற்றக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நீா்நிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலச் சங்கச் செயலரும், மதுரை தத்தனேரியைச் சோ்ந்தவருமான மயில்சாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாநகராட்சி 16-ஆவது வாா்டு சா்வேயா் காலனி பகுதியில் ஊருணியும், கால்வாயும் இருந்தன. இந்த ஊருணியில் நிரம்பும் தண்ணீரால் கால்நடைகள், பறவைகள் பயனடைந்தன.

Advertisement

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊருணியை மூடி அங்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்பட்டது. இதனால், ஊருணியில் தண்ணீா் தேங்குவது தடுக்கப்பட்டு, நீா்வள ஆதாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகளில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகளை பொருள்படுத்தாமல் ஊருணியில் அலுவலகம் கட்டப்பட்டது.

இதுபோன்ற கட்டடங்களால் எதிா்காலத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலை ஏற்படும். எனவே, ஊருணி, கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிடும் இடம் தற்போது தோட்டமாக பராமரிக்கப்படுகிறது. இதே இடத்தில் மழைநீா் சேமிப்பு மையம் ஏற்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.