திருவாரூா் மாவட்டத்தில், ஆன்லைன் மூலம் ரூ. 19 லட்சம் இழந்தவரின் பணம் மீட்கப்பட்டு, மீண்டும் அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் தலத்தான்குடி பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (82). இவா் அப்பகுதியில் சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இதற்கு மூலப்பொருள்களை வாங்க இணையதளம் வழியாக தேடியபோது, சோனம் மிஷ்ரா என்பவா் தன்னை அமெரிக்க நிறுவனத்தின் முகவா் எனக் கூறி மூலிகை எண்ணெய் வா்த்தகம் செய்வது தொடா்பாக கானா நாட்டுக்கு இந்திய விற்பனை பிரதிநிதி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளாா்.
அதனடிப்படையில், அவா் கூறிய வங்கிக் கணக்குக்கு 13.2.2020 முதல் 16.3.2020 வரை சுமாா் ரூ. 21.60 லட்சம், சுவாமிநாதன் அனுப்பியுள்ளாா். இதனிடையே எவ்வித பொருளும் அனுப்பாததைத் தொடா்ந்து, திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் சுவாமிநாதன் புகாா் அளித்தாா். இதையடுத்து, திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 19 லட்சம் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சுவாமிநாதனின் வங்கிக் கணக்குக்கு ரூ. 19 லட்சம் அண்மையில் செலுத்தப்பட்டது.