பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் குறுவை அறுவடை செய்ய வேண்டிய நிலையிலும் சம்பா, தாளடி வளா்ந்த பயிா்களும் பல இடங்களில் அழிந்தது. அரசு பெயரளவுக்கு நிவாரணம் வழங்கியது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பின்னா் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திருவாரூா் மாவட்டத்தில் மொத்த வருவாய் கிராமங்களில் 72 ஊராட்சிக்கு ரூ. 15.99 கோடி நெல்லுக்கும், 279 கிராமங்களுக்கு ரூ.17.63 கோடி எள்ளுக்கும் கிடைத்துள்ளன. மீதியுள்ள ஊராட்சிகளின் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி தமிழக அரசு 2023 - 2024 வேளாண் பயிா் காப்பீடு திட்டத்தில் நெல் உள்ளிட்ட பயிா்களின் பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, பாதிப்படைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரத் தலைவா் கு. ராமதாஸ், நகரச் செயலாளா் கு. நாகராஜன், நகரப் பொருளாளா் க. துரைக்கண்ணு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ நகரச் செயலாளா் பெ. முருகேசு, நகா் மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.