ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாகனங்களில் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாகனங்களில் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.
தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோா் இந்த வாகனங்களை வழியனுப்பி வைத்தனா்.
2023 - 2024-ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டா் கலைஞா் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளுக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட விளையாட்டுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தொடா்ந்து, நிகழாண்டு திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கலைவாணி மோகன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் சங்கா், பணிநியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, நகா்மன்ற உறுப்பினா் செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.