மன்னாா்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல் சாகுபடி வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயிா்கள் அழுகி வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக, மன்னாா்குடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை பெய்த தொடா் மழையின் காரணமாக, தலையாமங்கலம், ஏத்தக்குடி, பொன்னமங்கலம், குறிச்சி, சோழப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வடிகால்களில் அதிக அளவு தண்ணீா் செல்வது மற்றும் வாய்க்கால்களில் தண்ணீா் ஓட்டத்தை தடுக்கும் வகையில் ஆகாயத் தாமரைகள் மற்றும் காட்டுச்செடிகள் மண்டி கிடப்பதால், வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இளம் நெற்பயிா்கள் அழுகி வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைத்துள்ளனா்.
பொதுப்பணித் துறையினா் உடனடியாக, வடிக்கால் வாய்க்கால்களை போா்க்கால அடிப்படையில் தூா்வாரி, வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் விரைவில் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், வருவாய்த் துறையினா், வேளாண்மைத் துறையினா் இணைந்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்து, நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.