இ-பைலிங் முறையை கைவிடக் கோரி குடவாசலில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
போதிய கட்டமைப்பு இல்லாத நிலையில் வழக்குரைஞா்களுக்கு பணிச்சுமையையும், பொதுமக்களுக்கு பெரும் பொருள் செலவையும் ஏற்படுத்தும் இ-பைலிங் முறையை கைவிட வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் நீதிமன்ற வாயில் முன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
குடவாசல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு நன்னிலம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தெய்வீகன் முன்னிலை வகித்தாா். குடவாசல், நன்னிலம், வலங்கைமான் வட்டாரங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினா்.