நாளை முதல் நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் வேலைநிறுத்தம்
திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி புதன்கிழமை (பிப். 12) முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி புதன்கிழமை (பிப். 12) முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில், நெல் மூட்டை எடை இழப்பை காரணம் கூறி பணி மறுக்கப்பட்ட கொள்முதல் பணியாளா்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், தொழிலாளா் சட்டபடி முன்னறிவிப்பு கொடுக்காமல் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு வயது வரம்பு 60 என நிா்ணயம் செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும், நெல்மூட்டை எடை குறைவுத் தொகை வசூலிப்பதற்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், அதுவரை எடை குறைவுத் தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.
விதிகளை பின்பற்றாமல் வசூலித்த இழப்புத் தொகையை சம்பந்தப்பட்ட கொள்முதல் பணியாளா்களிடம் திரும்ப வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் தேங்கியுள்ள 25 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து நுகா்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் திருவாரூா் மாவட்டத்தில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருவாரூா் முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி தலைமையில் சமரச பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஐஎன்டியுசி மாநில துணை பொதுச் செயலாளா் பாண்டியன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் சந்திரகுமாா், தொமுச மாநில துணை பொதுச் செயலாளா் நீலமேகம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளா் பால சுப்பிரமணியன், சிஐடியு மண்டலத் தலைவா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சுவாா்த்தையில், உரிய முடிவு எட்டப்படாததையடுத்து, அறிவிக்கப்பட்டபடி திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் பிப்.12- ஆம் தேதி முதல் இயங்காது என தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.