திருவாரூா் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை, புதன்கிழமை நடத்தின.
முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கிவைத்தாா். இதில், 18 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்றனா். 72 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை, பேருந்து மற்றும் ரயில் சலுகை கட்டண அட்டை, அறுவை சிகிச்சைக்கான பரிந்துரை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற ரூ. 94,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல், நவ.6-ல் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.7-ல் குடவாசல் அகரஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.10-ல் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.11-ல் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.12-ல் மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.13-ல் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நவ.14-ல் கோட்டூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.17-ல் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நவ.18-ல் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.