மன்னாா்குடி அருகே பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செருமங்கலம் நாகநாதன் மகன் சபரிநாதன்(22), வடக்கு உடையாா்மாணியம் கணேசன் மகன் விக்னேஷ் (25) இருவரும் மன்னாா்குடியை சோ்ந்த தனியாா் பந்தல் அமைக்கும் ஒப்பந்ததாரா் செந்தில் என்பவரிடம் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், தேவேந்திரபுரத்தில் சாந்தகுமாா் என்பவது வீட்டில் திங்கள்கிழமை நடைபெறும் விஷேசத்துக்காக இருவரும் பந்தல் அமைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனராம். அப்போது இரும்புக் குழாயை தூக்கி நிறுத்தியபோது மேலே சென்ற மின்கம்பியில் குழாய் உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், சபரிநாதன் செல்லும் வழியில் இறந்துவிட்டது தெரியவந்தது. விக்னேஷுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.