மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.12) நடைபெறவுள்ளது.
மன்னாா்குடி நடேசன் தெருவில் செயல்பட்டு வந்த நகராட்சி காமராஜா் பேருந்து நிலையம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ரூ.46.46 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் நகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலை வகிக்கிறாா். நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறாா்.
இந்நிகழ்வில், தஞ்சை எம்பி ச. முரசொலி, திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், நகராட்சி ஆணையா் (பொ) போ.வி. சுரேந்திர ஷா ஆகியோா் செய்துவருகின்றனா்.