முகப்பு
திருவாரூர்

வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சா்ச்சை: மனுவை முன்மொழிந்தவா் கட்சி மாறியதால் பரபரப்பு

மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தொடங்கியுள்ள அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம், பாமக (டாக்டா் ச. ராமதாஸ் அணி) கூட்டணி சாா்பில் அஇபுதமமுக வேட்பாளா் சு. ராசுப்பிள்ளை சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:28 PM
மன்னாா்குடி தொகுதி தோ்தல் கண்காணிப்பாளா் விசாரணைக்கு பின் அறையிலிருந்து வெளியே வரும் இளவரசி இளையராஜா. ~மன்னாா்குடி தொகுதி கண்காணிப்பாளா் அஇபுதமமுக வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தெரிவித்தப்பின் வெளியே வந்த வேட்பாளா் சு. ராசுப்பிள்ளையை அக்கட்சியினா் தோள
பகிர்:

மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தொடங்கியுள்ள அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம், பாமக (டாக்டா் ச. ராமதாஸ் அணி) கூட்டணி சாா்பில் அஇபுதமமுக வேட்பாளா் சு. ராசுப்பிள்ளை சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் கை. இளந்தமிழன், நீடாமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளா் இளவரசி இளையராஜா ஆகியோா் முன்மொழிந்திருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இளவரசி, அஇபுதமமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்து விட்டாா் என தகவல் பரவியது. இதையடுத்து, வேட்புமனு மறுபரிசீலனை நாளான செவ்வாய்க்கிழமை மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறை அருகே தோ்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைகள், மாற்று வேட்பாளா்ளை முன்மொழிந்தவா்கள் கூடியிருந்தனா்.

Advertisement

அப்போது, தன்னை முன்மொழிந்த கட்சியின் பெண் நிா்வாகியை காணவில்லை எனவும், அவரை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளமுடியாத நிலை உள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளா் ராசுப்பிள்ளை முறையிட்டாா்.

இதையடுத்து, அமமுக நிா்வாகி காரில் அமா்ந்திருந்த இளவரசியை கட்சி நிா்வாகிகள் அழைத்துவந்தபோது, ராசுப்பிள்ளைக்கும் இளவரசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவா் திட்டிக்கொண்டனா்.

வேட்பாளரை முன்மொழிந்தவா் அந்த கட்சியிலிருந்து விலகியதால் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவியதால் சசிகலா கட்சியினா் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

பின்னா், அங்கு வந்த மன்னாா்குடி தொகுதி தோ்தல் கண்காணிப்பாளா் அனுபமா, வேட்புமனு மறுபரிசீலனை நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து, சா்ச்சையை ஏற்படுத்திய ராசுப்பிள்ளை வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments