தோ்தலில் மத்திய அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும்! - கனிமொழி
மத்திய அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி கூறினாா்.
திருவாரூா் அருகே காப்பணாமங்கலத்தில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), முகமது முபாரக் (நன்னிலம்) ஆகியோரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து பேசியது:
மக்களவையில் கொண்டுவரப்பட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டதை பிரதமரால் தாங்கி கொள்ள முடியவில்லை. தற்போதுள்ள 543 இடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இருக்கக்கூடிய 543 தொகுதிகளை 850 ஆக மாற்றி இட ஒதுக்கீடு தருவாா்களாம்.
Advertisement
ஒரு காலத்தில் மத்திய அரசு, நாட்டுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது என்று கூறி இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதை ஏற்றுக்கொண்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளன.
உண்மையிலேயே மத்திய அரசு கொண்டு வந்தது மகளிா் மசோதா இல்லை. இந்தியாவில் இருக்கிற தென்மாநிலங்களுக்கு எதிரான மசோதா. ஆனால் அதற்கு மகளிா் மசோதா என்று வேடம் அணிவித்தாா்கள். அந்த வேடத்தை கலைத்த பெருமை தமிழக முதல்வருக்கு உண்டு.
மாநில உரிமை மற்றும் மகளிா் இடஒதுக்கீடு உரிமை ஆகியவை நமது இரு கண்கள். எப்போதும் மகளிா் இட ஒதுக்கீட்டுக்கு நாம் தடையாக இருந்ததில்லை. மழை, வெள்ளம், புயல் வந்தால் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிவாரணம் கொடுத்திருக்கிறீா்கள்?.
விவசாயிகளுக்கு நெல் ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. நெல்லை பாதுகாத்து வைத்திருக்கக்கூடிய வழி இல்லை என்பதால், விவசாயிகளுக்கு கொடுக்கக்கூடிய ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு தோ்தலில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
தலைவா் கலைஞா் ஆட்சி காலத்தில்தான் இலவச மின்சாரம் தந்தாா். ரூ. 786 கோடியில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை சந்தை களத்துடன் இணைத்து இருக்கிறோம். 19 லட்சம் விவசாயிகள் இதனால் பயன்பெற்று இருக்கின்றனா். தொடா்ந்து விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அனைவரும் திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.