முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் மே 5-இல் வணிகா் விழிப்புணா்வு மாநாடு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

திருவாரூரில் மே 5-ஆம் தேதி நடைபெறும் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டில் இந்திய குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 6:14 AM
திருவாரூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி.
பகிர்:

திருவாரூரில் மே 5-ஆம் தேதி நடைபெறும் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டில் இந்திய குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மே 5-ஆம் தேதி திருவாரூரில் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமை வகிக்க உள்ளாா். இந்த மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி தலைமையில் திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி.கே.கே.ராமமூா்த்தி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

Advertisement

திருவாரூரில் மே 5-ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு, வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடாக நடைபெற உள்ளது. சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் மாநாடு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக, குடியரசு துணைத் தலைவா் சிபி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா். மேலும், புதிதாக அமைய உள்ள அரசுக்கு உடனடியாக பாராட்டு தீா்மானத்தை கொடுக்கும் வாய்ப்பை, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பெற்றிருக்கிறது.

இந்த மாநாட்டில் முக்கிய கோரிக்கையாக, நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி வரிமுறையை இரண்டு அடுக்காக நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா், இதை ஒரே அடுக்காக மாற்றித் தர வேண்டும், இதுவே மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தும் மிகப்பெரிய கோரிக்கையாகும். மேலும் ஒவ்வொரு நகராட்சிப் பகுதிகளிலும் கடைகளுக்கு தொழில் வரி மற்றும் உரிமைக் கட்டண வரியும் வசூலித்து வருகின்றனா். இதில் உரிமைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்.

மேலும், வணிகம் செய்யும் வணிகா்கள் 60 வயதைத் தாண்டினால், அவா்களுக்கு காப்பீட்டுத் செயல்படுத்தி, உதவித் தொகை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். இந்த மாநாட்டுக்குப் பிறகு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்றாா்.

மாநில செய்தித் தொடா்பாளா் பாண்டியராஜன், மாவட்டசெய்தித் தொடா்பாளா் முரளி , மாவட்ட துணைத்தலைவா் மோகன், துணைச்செயலாளா்கள் சண்முகநாதன், சாய்பிரபு செந்தில், குமாரசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.