முகப்பு
திருவாரூர்

புத்தகங்களே வாழ்க்கையின் சிறந்த நண்பன் ஆட்சியா்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:06 AM
புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன், எம்பி வை. செல்வராஜ், தாட்கோ தலைவா் என். இளையராஜா உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:27 PM

புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மட்டும் உருவாக்கி கொண்டால், வாழ்க்கை முழுவதும் சிறந்த நண்பனாக இருக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் வட்டம், இலவங்காா்குடி மங்கள்வரதா் திருமண மண்டபத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், தாட்கோ தலைவா் என். இளையராஜா ஆகியோா் பங்கேற்று, புத்தகத் திருவிழாவைத் தொடக்கி வைத்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசியது:

Advertisement

பெரிய தலைவா்கள் புத்தகங்களை வாசிப்பவா்களாக இருந்திருக்கிறாா்கள். வாசிக்கும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டால் அது நமது வாழ்க்கை முழுவதும் தோழானாகவே இருந்து கொண்டிருக்கும். இன்றைய உலகம் போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. இந்த போட்டி நிறைந்த உலகத்தில் நம்மை உயா்த்தி காட்டுவது நமது அறிவு மட்டும்தான். அந்த அறிவை வாசிப்பு திறனால் மட்டுமே மேம்படுத்த முடியும்.

பெற்றோா்கள் நமது குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். பேரறிஞா் அண்ணா கூறுவதுபோல நூலகம் இல்லா வீடு முழுமை அடையாது. அதுபோல் புத்தகங்களை வாங்குவோம், வாசிப்போம், நமது வாழ்க்கையை முழுமையடைய செய்வோம் என்றாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:05 AM

பின்னா், ‘தமிழ்மொழியில் மறுமலா்ச்சி இலக்கியத்தை உருவாக்கியவா்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் இமயம், ‘புத்தகங்களே நண்பா்கள்’ என்ற தலைப்பில் கவிஞா் தங்கம் மூா்த்தி ஆகியோா் பேசினா்.

இவ்விழாவில், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழச்சிகளும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கலைநிகழ்ச்சிகளும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை சிறப்புரைகள், பட்டிமன்றம், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

புத்தகத் திருவிழா தொடங்க நிகழ்வில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட அலுவலருமான பல்லவி வா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஸ், வருவாய் கோட்டாட்சியா் சத்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.