முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் புதிய அரசு மகளிா் கல்லூரி காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

மன்னாா்குடியில் புதிய அரசு மகளிா் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:44 AM
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்த புதிய மகளிா் கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:28 PM

மன்னாா்குடி: மன்னாா்குடியில் புதிய அரசு மகளிா் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

மன்னாா்குடியில் மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கை ஏற்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முயற்சியால், கடந்த 2025- ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட்டாா்.

இதையடுத்து, மன்னாா்குடி வஉசி சாலையில் உள்ள அரசுக் கல்லூரியில், புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிா் கல்லூரிக்கு தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது. முதல்வா், 7 பேராசிரியா்கள், 5 அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, மாணவிகள் சோ்க்கை பணிகள் நடைபெற்றன.

Advertisement

இதைத்தொடா்ந்து, புதிய அரசு மகளிா் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்து கட்டுப்படுவதற்கு முன்,தற்காலிகமாக கல்லூரி செயல்பட இடம் தோ்வு நடைபெற்றது. இதில், போதிய இடவசதியும் கல்லூரிக்கான இடசூழலும் அமையாததால். கடந்த சில மாதங்களாக வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மன்னாா்குடி- தஞ்சை பிரதானசாலை மேலவாசல் குமரபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன வளாகத்தின் ஒரு கட்டடத்தில் மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரி செயல்பட இடம் தோ்வு செய்யப்பட்டு, அலுவலகம், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கி, அண்மையில் நிறைவடைந்தன.

சென்னை தலைமைச் செயலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மன்னாா்குடி புதிய அரசு மகளிா் கல்லூரியை காணொலி மூலம் திறந்து வைத்தாா். மன்னாா்குடியில் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றிவைத்தாா்.

கல்லூரி முதல்வா் சா. சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. பாலு, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் க.தனராஜ் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.