முகப்பு
திருவாரூர்

பயறு வகைப் பயிா்கள் காப்பீடுக்கு கால நீட்டிப்பு வழங்கக் கோரிக்கை

நெல் அறுவடை தாமதம் ஆவதால், பயிறு வகை பயிா்களுக்கு காப்பீடு திட்ட காப்புத்தொகை செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:28 PM
நெல் வயல்.
பகிர்:

நெல் அறுவடை தாமதம் ஆவதால், பயிறு வகை பயிா்களுக்கு காப்பீடு திட்ட காப்புத்தொகை செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

கடந்தாண்டு நிறைவிலும், நிகழாண்டு தொடக்கத்திலும் பொழிந்த பருவம் தவறிய மழையால் நெல் சாகுபடி தள்ளிப்போனது. பல இடங்களில் நெல் விதைப் பயிா்கள் அழிந்து இரண்டாவது விதைப்பு செய்யப்பட்டது. இவை பிப்ரவரி இறுதியில்தான் அறுவடைக்கு வரும். தற்போது சம்பா அறுவடை தொடங்கினாலும், முழு வீச்சில் இன்னும் நடைபெறவில்லை. அநேகமாக மாா்ச் முதல் வாரம் வரை நெல் அறுவடை ஆகும் நிலையில்தான் பல இடங்களில் பயிா்கள் உள்ளன.

Advertisement

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி என்பது இயற்கை ஒத்துழைத்தால் பெரிய செலவில்லாமல் விவசாயிகளுக்கு பணப்பலனைக் கொடுக்கும். ஆனாலும், பருவநிலை இடா்பாடுகள், நோய் தாக்குதல் ஏற்பட்டால் இதன் மகசூலும் பாதிக்கும் நிலை ஏற்படும். இப்படியான நிகழ்வுகள், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிலையில், இதற்கான பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சில இடங்களில் கிடைத்த இழப்பீடு ஓரளவு விவசாயிகளுக்கு கைகொடுத்தது.

இந்த சூழலில், விவசாயிகள் பயறு வகைகளுக்கு காப்பீடு செய்ய முயன்றபோது, பிப்ரவரி 17-ஆம் தேதியுடன் காப்புத்தொகை செலுத்தும் காலம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பாசிப் பயிா்கள் தெளித்து முளைத்து இருந்தால்தான் காப்பீடு செய்து கொள்வதற்கான சான்றிதழை வருவாய்துறை வழங்கும். நெல் அறுவடைக்கு முன்னரே விதைப்பது என்பதும் சாத்தியமில்லை.

இந்த இக்கட்டான நிலையில் விவசாயிகள் தற்போது உள்ளதால், பயறு வகை காப்பீடு திட்டத்தில் காப்புத் தொகை செலுத்தும் காலத்தை பிப்ரவரி இறுதிவரை நீட்டித்து வழங்க வேண்டும். மேலும்,கிராம நிா்வாக அலுவலரின் சான்றிதழை விரைவாக கொடுக்க உத்தரவிட வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்வதற்கு உதவியாக, அரசுக்கு மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments