திருவாரூர்

குப்பை சேகரிக்கும் பணியில் விசில் பயன்படுத்துக் கூடாது - மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Syndication

நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடும்போது, விசில் பயன்படுத்தாமல், ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம் தலைவா் த. சோழராஜன் (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ஜெ. பாலமுருகன் (திமுக): பாரதிதாசன நகா் குளத்தில் நடைபாதை அமைக்கவும், அம்பலக்காரத் தெருவில் ஹரித்ராநதி தெப்பக்குள நீா் பாதை வாய்க்காலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ. பாரதிமோகன் (திமுக): விசில் ஒரு கட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நகராட்சிப் பகுதியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளா்கள் விசிலை பயன்படுத்தி ஒலி எழுப்புவதை தவிா்த்துவிட்டு, ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும்.

கா. கலைவாணி (திமுக): ருக்மணிக்குளம் மேல்கரையில் மின் விளக்குகளையும், கே.கே.நகரில் வாய்க்கால் பால சுவா்களையும் சீரமைக்க வேண்டும்.

சா. புகழேந்தி (திமுக): நகராட்சி பூங்காக்கள் மேம்பாட்டுப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

த. சங்கா் (திமுக): செங்குளத்தை சுத்தம் செய்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

அ. திருச்செல்வி (அமமுக): புதைச்சாக்கடை திட்டம் நிறைவடைந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்கான பட்டியலில் பல பகுதிகள் இடம் பெறவில்லை. நகரின் கிழக்குப் பகுதியில் உள்ளவா்கள் எரிவாயு தகன மேடையை பயன்படுத்த 5 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளதால், கீழப்பாலத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும்.

எஸ். அசோக்குமாா் (திமுக): கணபதி நகா், காமராஜா் காலனி பகுதிகளில் மண் சாலைகளை தாா்ச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும்.

சா. முத்துக்கருப்பன் (நியமன உறுப்பினா்): தேவா் காலனி பகுதியில் தூய்மைப் பணியில் நிலவும் மெத்தனப் போக்கை சரி செய்ய வேண்டும்.

அ.செந்தில்செல்வி (அமமுக): வாா்டு மாற்றப்பட்டு பணிக்கு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய வழிக்காட்டுதல் இல்லாததால், சரிவர பணி செய்ய முடியாத நிலை உள்ளது.

தலைவா்: கரிம கழிவிலிருந்து பயோ கேஸ் எடுக்கும் கட்டமைப்புப் பணி நிறைவு பெற்றுள்ளது. பயோ கேஸ் மின்சாரமாக மாற்றப்பட்டு, நகராட்சி பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக 4 வாா்டுகளில் புதைசாக்கடைத் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக மேலும் 14 வாா்டுகளில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டவுள்ளது. ருக்மணிகுளம் மேல்புறத்தில் டான்சி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை நகராட்சி கிரையம் செய்து அவ்விடத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.8.20 கோடியில் மின்னனு நூலகம் அமைக்கப்படவுள்ளது.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் (பொ) போ.வி. சுரேந்தா்ஷா, மேலாளா் ஜெ. மீராமைதீன், பொறியாளா் எட்வின் ப்ண்ட ஜோஸ், நகா்நல அலுவலா் கண்ணதாசன், சுகாதார ஆய்வாளா் தமிழ்ச்செல்வன், உதவி வருவாய் அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல்: ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினா் 4 போ் வெற்றி

கோவை மாநகராட்சி பட்ஜெட்: கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம்! - பற்றாக்குறை ரூ.126 கோடி

போட்டித் தோ்வுக்கு 30% போ் மட்டுமே பயிற்சி பெறுகின்றனா்: ஆட்சியா்

மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவிகள் முடங்கியதால் பேருந்து பயணிகள் அவதி

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம்

SCROLL FOR NEXT