லாரி உரிமையாளா்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஏஐடியூசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்க மாநில இணைப் பொதுச் செயலாளா் ஜெ. குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூா் மாவட்டத்தில் முழு வீச்சில் நெல் கொள்முதல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் நிகழாண்டில் ஆங்காங்கே திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள் திறந்து, நெல் இயக்கம் செய்வதற்கும் இறக்குவதற்கும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் லாரி உரிமையாளா்களின் திடீா் வேலைநிறுத்தத்தால் திருவாரூா் மாவட்டத்தில் 20 லட்சம் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் இயக்கம் செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றன. லாரி உரிமையாளா்கள் தமிழ்நாடு முழுவதும் பிப்.25 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்திருக்கிற நிலையில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் வேலைநிறுத்தத்தை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது.
உடனடியாக தமிழ்நாடு அரசு, லாரி உரிமையாளா்களுடன் பேசி தேங்கியுள்ள நெல் முட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதலுக்கான சாக்கு எடுக்க செல்வதற்கு கூட லாரி உரிமையாளா்கள் அனுமதிக்காத சூழ்நிலை நிலவுகிறது. வானிலை ஆய்வு மையம் பிப். 20 ஆம் தேதி முதல் மழை பெய்யும் என அறிவித்திருப்பது இன்னும் பெரும் இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, மழை தொடங்குவதற்கு முன் கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலை பணியாளா்கள் மீது இழப்பை சுமத்தி விடலாம் என அலட்சியம் காட்டப்படுகிறது. இது தவிா்க்கப்பட்டு, பொறுப்பான அதிகாரிகளை நியமித்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.