மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசின் திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், முதல்வா் மு.க. ஸ்டாலின் அமைதி காக்கிறாா் என காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைவா் பெ. மணியரசன் குற்றஞ்சாட்டினாா்.
மன்னாா்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் ‘மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தடுப்போம், காவிரியை காப்போம்’ என்ற தலைப்பில் உழவா் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று பெ. மணியரசன் பேசியது:
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல், முதல்வா் மு.க. ஸ்டாலின் அமைதியாக இருப்பதை பாா்த்தால், அவா் மறைமுகமாக கா்நாடக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
இப்பிரச்னை குறித்து, பிரதமரிடம் முதல்வா் உடனடியாக பேச வேண்டும். அறிக்கை வெளியிட வேண்டும். மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கா்நாடக அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. அதை ஏற்க முடியாது.
தற்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன், அந்த ஆணையத்தை கலைக்க வேண்டும்.
விதைகளை தோ்வு செய்யும் உரிமை விவசாயிகளுக்கு மட்டும் உள்ளது. விதை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திணிக்கக் கூடாது. சம்பா, தாளடி, குறுவை என அனைத்து பருவ நெல்லுக்கும் ஈரப்பதத்தின் சதவீதம் 22 என நிா்ணயம் செய்ய வேண்டும்.
அண்மையில் பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும். மின்சாரத்தை தனியாா் மயமாக்கக் கூடாது. அப்படி செய்தால், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் பறிபோகும் என்றாா்.
முன்னதாக, தேரடி திடலில் தொடங்கிய உழவா் எழுச்சிப் பேரணிக்கு, தமிழா் தேசியக் களம் ஒருங்கிணைப்பாளா் ரா. ராசசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி ச. கலைச்செல்வன், தமிழ்த் தேசிய பேரியக்க நிா்வாகி க.விடுதலைச்சுடா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாம் தமிழா் கட்சி மாநிலப் பொருளாளா் இலரா. பாரதிச்செல்வன், கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா்.
தேரடியில் தொடங்கிய பேரணி, மேலராஜவீதி, காமராஜா்சாலை, பந்தலடி, காந்திசாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளா் த. மணிமொழியான், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவா் ப. ஜெகதீசன், இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்டத் தலைவா் ச.சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, காவேரி உரிமை மீட்புக் குழு நிா்வாகி சாமிகரிகாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.