சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி, திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும்; இதற்கான இழப்பை பணியாளா்கள் மீது சுமத்துவதை தவிா்க்க வேண்டும்.
60 வயதுக்கு மேல் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளா்களின் கூலியை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்; தகுதியுள்ளவா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்; கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கான கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளா்கள் கே. புஸ்பநாதன், மதன் முருகேசன் தலைமை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் சி. சந்திரகுமாா் கோரிக்கைளை விளக்கிப் பேசினாா்.
இதில், நிா்வாகிகள் ஆா். சந்திரசேகரஆசாத், ஜெ. குணசேகரன், எஸ். சிவானந்தம், பி. நாகேஷ், ஆா். செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.